CSK – MI: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன.
கடந்த ஆண்டு சென்னை அணி குறைவான ‘ரன் ரேட்’ காரணமாக ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது. இன்று தனது முதல் போட்டியில் கவனமாக விளையாடி, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணியின் சுழற்பந்துவீச்சு அசுர பலத்தில் உள்ளது. அனுபவ ‘ஸ்பின் கிங்’ தமிழகத்தின் அஷ்வின் மிரட்டலாம். பிரிமியர் அரங்கில் 180 விக்கெட் (212 போட்டி) வீழ்த்தியுள்ளார். ஜடேஜா, நுார் அகமது, ஷ்ரேயஸ் கோபால், தீபக் ஹூடா போன்றோரும் ‘சுழல்’ ஜாலம் காட்டலாம்.
தோனி 43, மீண்டும் களமிறங்குவது பலம். கடைசி கட்டத்தில் விளாச காத்திருக்கிறார். துவக்கத்தில் கேப்டன் ருதுராஜ் உடன் ரச்சின் ரவிந்திரா அல்லது கான்வே வரலாம். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய நியூசிலாந்தின் ரச்சின் (4 போட்டி, 263 ரன்) தொடர் நாயகன் விருது வென்றார். இவரது அதிரடி தொடரலாம். ‘மிடில் ஆர்டரில்’ ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே கைகொடுக்கலாம். ‘வேகத்துக்கு’ பதிரானா உள்ளார்.
இதேபோல் சென்னைக்கு இணையாக சம பலம் வாய்ந்த மும்பை அணியும் இதுவரை ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது. மும்பை அணி ‘வேகப்புயல்’ பும்ரா (காயம்), ஹர்திக் பாண்ட்யா (கடந்த ஆண்டு தாமதமாக பந்துவீசியதால், ஒரு போட்டி தடை) இல்லாமல் களமிறங்குகிறது. ‘டெத் ஓவரில்’ பும்ரா இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது, அணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கடைசி இடம் பிடித்தது. இன்றைய போட்டியில் பாண்ட்யாவுக்கு பதில் தற்காலிக கேப்டனாக சூர்யகுமார் களமிறங்க உள்ளார். இரு அணிகளும் 37 போட்டிகளில் மோதின. மும்பை 20, சென்னை 17ல் வென்றன. சேப்பாக்கத்தில் 8 போட்டிகளில் மோதின. சென்னை 3, மும்பை 5ல் வென்றன. கடைசியாக மோதிய 5 போட்டியில் நான்கில் சென்னை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
சென்னை – மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், சென்னை – மும்பை ஐபிஎல் போட்டியை காணவரும் பார்வையாளர்கள்,போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மா.போ.கழக பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் மா.போ.கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல், இன்றைய நாளில் ஐதராபாத்தில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.