என் உயிரைக் கொடுத்தாவது நாட்டில் பிளவு ஏற்படுவதை தடுப்பேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ரெட் ரோட்டில் நடைபெற்ற ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஈத் நமாஸ் சபையில் பேசிய மம்தா பானர்ஜி, வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்யவும், நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தவும் வலியுறுத்தினார். சிலர் நாட்டைப் பிளவுபடுத்தி வெறுப்பு அரசியலை நடத்த முயற்சிக்கிறார்கள். நான் என் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன். ஈத் நாளான இன்று இந்தியாவை பிரிக்க நினைப்பவர்களுக்கு ஒன்றை உறுதியுடன் கூறுகிறேன், என் உயிரைக் கொடுத்தாவது நாட்டில் பிளவு ஏற்படுவதை தடுப்பேன் என்றார்.
மேற்கு வங்கத்தில் அமைதியையே விரும்புகிறோம், எங்களுக்கு கலவரம் வேண்டாம். அதே போல் தேசத்திலும் அமைதியையே விரும்புகிறோம், பிளவுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மேற்கு வங்கத்தில் என்ஆர்சியை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். தற்போதுள்ள குடியுரிமைப் பதிவுகளும், செயல்களும் போதுமானது என்பதே எங்களின் நிலைப்பாடாக உள்ளது.எதிரிகளின் பணபலம் மற்றும் ஏஜென்சிகளுக்கு எதிராக போராட நான் தயாராக இருக்கிறேன், ஆனால், நான் தலை குனிய மாட்டேன். இன்னும் ஒரு வருடத்தில் நம் நாட்டில் யார் ஆட்சிக்கு வருவது என்பதைத் தீர்மானிக்க தேர்தல் நடத்தப்படும். பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். அடுத்த தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு எதிராக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால் அனைத்தும் முடிந்து விடும் என தெரிவித்தார்.