தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல், ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 5ஆம் தேதி கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 60 முதல் 70 கி.மீ வரையிலும் அவ்வப்போது 80 கி.மீ வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வரும் 4ஆம் தேதி திருவள்ளூரில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “எதிர்பார்த்த ரெட் அலர்ட் வந்துவிட்டது. சென்னை, திருவள்ளூருக்கு மழை காட்டும்போதேல்லாம், திருவள்ளூரை விட சென்னையில் தான் அதிக மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தாலும், சென்னையில் அதிக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை, திருவள்ளூர் மக்கள் 3, 4ஆம் தேதிகளில் தேதிகளில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.