சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திரா நெல்லூருக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா புதுச்சேரி மற்றும் நெல்லூர் பகுதிகளை நெருங்கி வடசென்னை பகுதி ஒட்டி நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி வலு குறைந்து நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. இதுவரை கன முதல் மிக கனமழை வரை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி பகுதிகளில் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
இன்று சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது, கன முதல் மிக கனமழை வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த சிவப்பு நிற எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு திரும்ப பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Gold Rate | தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை..!! இன்றும் புதிய உச்சம்..!! எவ்வளவு தெரியுமா..?