நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.
தேனாண்டாள் முரளி தலைமையிலான நிர்வாகத்தினர் சமீபத்தில் நடைபெற்ற பொது குழுவில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதில், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அல்லது முன் தொகை பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மீது ரெட் கார்டு விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய 5 பேருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்திருந்தனர்.
இந்நிலையில், அந்தப் பட்டியல் தற்போது 14 பேர் என்று உயர்ந்துள்ளது. அதில் நடிகர் தனுஷ், நடிகைகள் அமலாபால், லட்சுமி ராய் உள்ளிட்டோரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 14 பேரிடமும் விளக்கம் கேட்டு ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர், நடிகைகளின் தனியார் பாதுகாவலர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்குவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளே தங்களுடைய சம்பளத்தில் இருந்து ஊதியம் கொடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல் நடிகர், நடிகைகளின் மேக்கப் மேன் உள்ளிட்ட உதவியாளர்கள் பெப்ஸியில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நாங்கள் சம்பளம் வழங்குவோம். வெளியில் இருந்து உதவியாளர்களை அழைத்து வந்தால் நாங்கள் கொடுக்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் வழங்குவதிலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகும்போது நடிகர், நடிகைகளுக்கு 10% மட்டுமே முன் தொகை வழங்கப்படும். அடுத்ததாக படப்பிடிப்பில் இருந்து டப்பிங் வரை 60% தொகை சம்பளம் வழங்கப்படும். இறுதியாக படத்தின் வெளியீட்டிற்கு முன்பு 30 சதவீதம் சம்பளம் வழங்கப்படும் என முடிவு செய்துள்ளனர். இது குறித்து நடிகர்களுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.