தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கங்காவதி தாலுகாவில் உள்ள சனபூர் அருகே துங்கபத்ரா ஆற்றில் குதித்து புதன்கிழமை காணாமல் போன பெண் மருத்துவர் அனன்யா மோகன் ராவின் உடல் மீட்கப்பட்டது. நம்பள்ளியில் வசித்து வந்த அவர், நகர மருத்துவமனையில் வேலைபார்த்து வந்துள்ளார். புதன்கிழமை ஆற்றில் குதித்த நிலையில், பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் தனது தோழிகள் அஷிதா மற்றும் சாத்விக் ஆகியோருடன் சுற்றுலா சென்றிருந்தார். புதன்கிழமை மாலை, மூவரும் தாங்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் பின்னால் அமைந்துள்ள துங்கபத்ராவில் நீந்தச் சென்றுள்ளனர்.
அனன்யா அருகிலுள்ள பாறையிலிருந்து ஆற்றில் குதித்ததாகவும், பலத்த நீரோட்டம் அவரை இழுத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவர் ஒரு பெரிய பாறையின் உச்சியில் இருந்து ஆற்றில் குதிக்கும் வீடியோ, ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் அனன்யாவின் குடும்பத்தினருடன் நண்பர்களால் பகிரப்பட்ட பின்னர், சமூக வலைதளங்களில் வைரலானது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக தனது நண்பர்களை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு, பாறையின் மீது இருந்து ஆற்றில் குதித்துள்ளார் மருத்துவர். அப்போது, நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், குதித்த வேகத்தில் மேலே வரமுடியாமல் தவித்துள்ளார். இதனைப் பார்த்த தோழிகள் உதவிக்கு கூச்சலிட்டனர். அதற்குள், அனன்யா நீரில் மூழ்கினார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனன்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மறுநாள் உள்ளூர் நீச்சல் வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில், பாறைகளுக்கு இடையே பெண் மருத்துவரின் உடல் சிக்கியிருந்தது. பல மணிநேர போராட்டத்துக்குப் பின், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.