மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை மயங்கி விழுமளவுக்குக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காததாலும், 19 வயதாகும் அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாலும் ஆத்திரமடைந்த காதலன் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமையன்று ரேவாவின் மௌகஞ்ச் பகுதியில் நடந்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், ‘காதலியுடன் ஒன்றாக நடந்து வந்துகொண்டிருந்த இளைஞன் திடீரென அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார். பின்னர் ‘ சாலையோரத்தில் மயங்கிக்கிடந்த பெண்ணைக் கண்ட சிலர் உடனடியாக போலீஸுக்கு தகவலளித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரும், வீடியோ அடிப்படையில் வீடியோ எடுத்த நபர் மற்றும் தாக்கிய இளைஞன் மீது ஐ.டி. சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வீடியோ எடுத்த நபரை கைது செய்திருக்கும் போலீஸார், தப்பியோடிய இளைஞனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.