கள்ளக்குறிச்சியில் திருமணமான பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, கணவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து சம்பவம் செய்ய முயன்ற இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் மடக்கிப் பிடித்து இடுப்பை சுற்றி சூடு வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காரனுர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவர் பூவரசன். இவர், தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது ஊரில் உள்ள திருமணமான பெண் ஒருவருடன் பழக்கமாகி வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை பூவரசன் காதலில் வீழ்த்தியதாக எண்ணி, பெண்ணின் உறவினர்கள் அவரை அழைத்துக் கண்டித்துள்ளனர். ஆனாலும், ஆசை அடங்காத பூவரசன், அந்தப்பெண் உடனான பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் கணவர் வெளியூர் சென்றுள்ளார். இதனையறிந்த குஷியான பூவரசன், சம்பவத்தன்று அந்தப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இவர் அந்த வீட்டுக்குள் செல்வதை பார்த்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று பூவசரனை மடக்கிப் பிடித்தனர். தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி பூவரசன் சமாளித்துள்ளார். ஆனால், அதனை காதில் கூட வாங்காத பெண்ணின் உறவினர்கள், பூவரசனை புரட்டுப்போட்டு தாக்கினர். அவரை ஆடையின்றி படுக்க வைத்து, தண்ணீர் தானே வேண்டும் இதோ செம்பில் வருகின்றது… என்று கூறி ஒரு செம்பை அடுப்பில் வைத்து நன்றாக சூடாக்கி, அவரது இடுப்புக்கு கீழே முன் பக்கமும் பின் பக்கமும் என மொத்தம் 8 இடங்களில் சூடு வைத்துள்ளனர். பூவரசனின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்ததால் அவரால் கத்தி கூச்சலிட முடியவில்லை.
வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு, அவரை அழைத்து வந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூவரசனின் தாயா, கச்சிராயபாளையம் காவல் நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார். இளைஞர் பூவரசனிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்றனர். மாணவர்களை தாக்கிய 3 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். பூவரசனுடன் திருமணம் கடந்த காதலில் ஈடுபட்ட பெண் தப்பிவிட்ட நிலையில், அந்தப் பெண்ணை ரகசியமாக சந்திக்கச் சென்ற பூவரசன், புரண்டு படுக்க கூட முடியாத நிலையில், சூடுபட்ட பூனையாக மருத்துவமனையில் தவித்து வருகின்றார்.