பொதுவாக பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாயின் போது வயிறு வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருப்பதும் சாதாரணமானது தான். மேலும் அந்த நேரத்தில் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இதனால் கோபம், எரிச்சல், அழுகை அதிகமாக ஏற்படும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் உடல்நிலை அதிகமாக பாதிக்கப்பட்டு காய்ச்சல், வாந்தி, செரிமான கோளாறு போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இவ்வாறு உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு உணவு பழக்கங்களிலும், அன்றாடம் செயல்முறைகளிலும் ஒரு சில விஷயங்களை மாற்றிக் கொண்டாலே போதும். மேலும் மாதவிடாய் வலியை தீர்ப்பதற்கு இஞ்சி கசாயம் மிகப் பெரும் அருமருந்தாகவும் இருந்து வருகிறது.
இஞ்சி கசாயம் செய்முறை: முதலில் இஞ்சியை நன்றாக கழுவிவிட்டு பின்பு மிக்சியில் சிறிது துண்டுகளாக நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். பின்பு அடி கனமான ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை சிறிது துண்டு எடுத்து பொடியாக நுணுக்கி போட வேண்டும். அதில் அரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின் அதில் அரைத்து வைத்த இஞ்சி சாறை வடிகட்டி ஊற்ற வேண்டும். இந்த கசாயம் ஒரு அளவிற்கு கொதித்து வந்ததும் ஒரு டம்ளரில் ஊற்றி தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
இந்த இஞ்சி கசாயத்தை மாதவிடாயின் போது குடித்து வந்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிடும். மேலும் இந்த இஞ்சி கசாயத்தை புதிதாக குழந்தை பெத்த தாய்மார்களுக்கும் குடுக்கலாம். இது தாய்பாலை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி விடும்.