LazyPay மற்றும் Kishsht உள்ளிட்ட நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன..
கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டென்ட் கடன் செயலிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அதிக வட்டி வசூலிப்பதுடன், கடனை குறித்த காலத்திற்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் புகைப்படத்துடன் இவர் கடனை செலுத்தவில்லை என்று அவரது நண்பர்களுக்கு அனுப்பி வந்தனர். கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்களை பற்றிய விவரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் வாங்கியவர்களை செல்போன் மூலம் தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களை செய்கின்றனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பலர் தற்கொலை செய்து கொண்ட அவலமும் அரங்கேறி உள்ளது. இதனிடையே பந்தயம், சூதாட்டம் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடன் சேவையில் ஈடுபட்டதற்காக சீனா உட்பட வெளிநாட்டு நிறுவனங்களால் இயக்கப்படும் 232 செயலிகளை முடக்க மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்லாக உள்ள 138 பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் சட்டவிரோத பணமோசடியில் ஈடுபட்டு வரும் 94 கடன் பயன்பாடுகளுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பித்தது.
Fintech நிறுவனங்களான LazyPay, IndiaBulls Home Loans மற்றும் Kisst ஆகியவை தடை செய்யப்பட்ட இணையதளங்களின் பட்டியலில் அடங்கும். www.indiabullshomeloans.com என்ற இணையதளமானது, ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான Indiabulls Housing Finance Ltd ஆல் இயக்கப்படுகிறது, Kissht.com ஆனது RBI-பதிவு செய்யப்பட்ட NBFC ONEMi டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற இணையதளங்களில் buddyloan.com, cashtm.in, kreditbee.en.aptoide.com, faircent.com, true-balance.en.uptodown.com மற்றும் mpokket.en.aptoide.com ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்கம் அளித்த பிறகு, வலைத்தளங்கள் மற்றும் செயலிகளின் மீதான தடை நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.. அந்த வகையில் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்த LazyPay மற்றும் Kishsht மீதான தடையை அரசு திரும்பப்பெறும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..