15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்க மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயம், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடத்தில் நிறுத்த தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, 2018 அக்டோபரில், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்த வரிசையில், மாசைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பழைய மற்றும் பொருத்தமற்ற வாகனங்களை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக நவீன மற்றும் புதிய வாகனங்களை சாலைகளில் கொண்டுசெல்ல வேண்டும் என அரசு கொள்கை வகுத்தது. இந்த கொள்கை இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற ‘அக்ரோ-விஷன்’ விவசாயக் கண்காட்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, 15 ஆண்டுகள் நிறைவடைந்த இந்திய அரசின் அனைத்து வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்கும் கோப்பில் கையெழுத்திட்டேன். இந்திய அரசின் இந்த கொள்கையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். இந்தக் கொள்கையை மாநில அளவில் அவர்கள் ஏற்க வேண்டும்” என்று கூறினார். பேருந்துகள், கார்கள், ட்ரக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.