தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தங்கசாமி (26). இவர் சட்டவிரோத மது விற்பனை செய்த வழக்கில் கடந்த 11ஆம் தேதி புளியங்குடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இத்தகைய நிலையில் தான் கடந்த 14ஆம் தேதி அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் தங்கசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அவருடைய உறவினர்கள் புளியங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால்தான் அவர் உயிரிழந்தார் என்றும் இது குறித்து காவல்துறையின் அடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் தங்கசாமியின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தங்கசாமியின் உடலில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சனிடம் கேட்டபோது தங்கசாமிக்கு காவல் நிலையத்தில் வைத்து எந்தவிதமான பாதிப்பும் உண்டாகவில்லை. கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு முன்புவரையில் அவருடைய உடலில் எந்த விதமான காயமும் இல்லை இது குறித்து மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்று கூறினார்.
இதற்கு நடுவே காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தங்கசாமியின் உறவினர்கள் நேற்று 5வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்