உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் என 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திங்கரா மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் நாடு முழுவதிலும் இருக்கூடிய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், எழுத்தாளர்கள் என பிரபலங்கள் 262 பேர் இணைந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
262 பேர் இணைந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “ஏற்கனவே உச்சநீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு ஷாகின் அப்துல்லா வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா வழக்கில் ஒருவர் சமுதாயத்தில் பதற்றத்தையும் பிரிவினையும் ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என்றால் சம்பந்தப்பட்ட அரசு புகார் வரவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்காமல், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யலாம், காவல் துறையினருக்கும் அதற்கு அதிகாரம் உண்டு என்பதை தீர்ப்பில் சொல்லியிருந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அமைந்திருப்பதால் உடனடியாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக காவல் துறையினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு போன்றதாகும். எனவே அரசுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படும் முகாந்திரம் இருக்கிறது. மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தானாக முன்வந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.