ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல், நாணயங்களை எடுப்பதற்கும் தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து 6.5 சதவீதமாக தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 2.50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரூபாய் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், மக்களுக்கு நாணயங்கள் கிடைப்பதை எளிதாக்குவதற்கும், சோதனை அடிப்படையில் நாணய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
முதற்கட்டமாக 12 நகரங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் இந்த நாணய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதனால் மக்கள் கையில் நாணயங்கள் எளிதாக கிடைக்கும் என்று கூறிய சக்திகந்தா தாஸ், இந்த இயந்திரங்களில் நீங்கள் நாணயம் பெற வேண்டுமெனில் அதற்கு நீங்கள் யூபிஐ மொபைல் ஆப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடியாக பணம் கொடுத்து நாணயமாக மாற்றிக்கொள்ள முடியாது. உதாரணமாக, உங்களுக்கு 30 ரூபாய்க்கு நாணயங்கள் தேவை என வைத்துக்கொள்ளலாம். நீங்கள் நாணய இயந்திரத்தில் உங்கள் மொபைலில் யூபிஐ ஆப் வாயிலாக QR Code ஸ்கேன் செய்து 30 ரூபாய் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். அதற்கு உங்களுக்கு 30 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை இயந்திரம் வழங்கும் என்று கூறினார்.
ஏற்கனவே வைக்கப்பட்ட நாணய இயந்திரங்களில் கள்ள நோட்டுகள் செலுத்தப்பட்டதாலேயே இப்போது புதிய நாணய இயந்திரங்களில் யூபிஐ பரிவர்த்தனை முறை பயன்படுத்தப்படுவதாக கூறிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரபி சங்கர், காய்கறி சந்தைகள் போன்ற நாணயங்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் இடங்களில் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி நாணய இயந்திரங்களை வைத்திருந்தது. ஆனால் இந்த இயந்திரங்களில் நிறைய கள்ள நோட்டுகள் செலுத்தப்பட்டன. கள்ள நோட்டுகள் ஒரு பிரச்சினையாக உருவானதால் ரிசர்வ் வங்கி மாற்று வழிகளை ஆராய்ந்தது. பலரும் செல் போன்களில் UPI பயன்படுத்தி வரும் நிலையில் UPI முறையில் இயங்கும் நாணய இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களால் நாணயங்களின் பயன்பாடு அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.