முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வலதுசாரி அமைப்பு அறிவித்துள்ளது.
மகாராஷ்ர மாநிலம் சம்பாஜி நகர் மாவட்டத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. இந்த சமாதியை இடிக்க விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து, நடைபெற்ற போராட்டத்தில் இருபிரிவினடையே வன்முறை வெடித்து. இதில் வீடு, வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த பதற்றம் காரணமாக சம்பாஜி நகர், நாக்பூர் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அமைப்பின் தலைவர் தினேஷ் பல்ஹரி ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இந்து கோயில்களை இடித்தவர் முகலாய மன்னர் அவுரங்கசீப். இந்து பெண்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டவர். கொடுங்குற்றங்களை இழைத்துள்ளார். இதனால், இவரின் சமாதியை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும்.
இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவரின் சமாதிக்கு இந்தியாவில் எங்கும் இடமில்லை. அவுரங்கசீப்பின் சமாதியை இடிப்பவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமி சங்கர்ஷ் நியாஸ் சார்பில் ரூ.21 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.