இந்தியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடும்ப சேமிப்பு கடுமையாக சரிந்துள்ளதாகவும் அதே சமயம் கடன் வாங்கும் விகிதம் 54 % அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-23ம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் சேமிப்பு 19 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய குடும்பங்களின் மொத்த சேமிப்பு மதிப்பு ரூ. 13.77 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டில் குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.2 சதவீதமாக இருந்தது. 2020-21ம் ஆண்டு அதாவது கொரோனா தொற்றுகாலத்தில் வருமானம் குறைவாக இருந்த போதிலும், குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு 2019-20ல் 8.1 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதமாக உயர்ந்திருந்தது. 2022-23ம் நிதியாண்டில் குடும்பங்களின் குறைந்த நிதி சேமிப்பு விகிதம் 76 சதவீதம் அதிகமாக இருந்தது. 2021-22ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நிதி சொத்துக்கள் 14 சதவீதம் மட்டுமே அதிகம். சொத்துக்களில், வங்கி வைப்புத்தொகை 32 சதவீதம் அதிகமாக இருந்தது. அஞ்சலக சேமிப்பு, நிலையான வைப்பு நிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு மற்றும் முதலீடுகள் அனைத்தும் 2022-23ம் ஆண்டில் மிகவும் குறைவாகவே இருந்தது.
மேலும், குடும்பங்களின் சேமிப்பு குறையும் அதே நேரத்தில் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்துள்ளது. 2021-22ம் ஆண்டில் இருந்து 2022-23ம் ஆண்டு வரை வணிக வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது 54 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் இறுதி நுகர்வு செலவு 2022-23ல் 7.5 சதவீதம் உயர்ந்தும், 2021-22ம் ஆண்டில் 11.2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. குடும்பங்களின் வருமானம் சரிந்தும், செலவு அதிகரித்தும் இருப்பதால் சேமிப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுக்கிறது.