தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகரப் பேருந்தில் பயணிப்போர் மத்தியில் கொரோனா பரவல் விகிதம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டது. தாம்பரம் – பிராட்வே வரையிலான 36 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பயணிக்கும் 21ஜி மாநகர பேருந்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 40 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுத்தத்திலும் 5 பயணிகள் ஏறுவது அல்லது இறங்குவது என்ற நிலையில், 1 கொரோனா பாதித்த பயணியுடன் பாதி நிரம்பிய பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று செல்லும்போது 5 முதல் 9 பேருக்குத் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இதேபோல், கொரோனா பாதித்த பயணிகளின் எண்ணிக்கை, பேருந்தில் பயணிப்போர் எண்ணிக்கை மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றைப் பொருத்து தொற்று பரவும் விகிதமும் அதிகரிக்க்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற கொரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.