தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறையில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் சட்டசபை பட்ஜெட்டின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போதே சாலை வரி விகிதங்களை உயர்த்தவும் அதில் குறிப்பிட்டிருந்தார். காரணம், தமிழ்நாட்டில் உள்ள இப்போதைய வரி விகிதங்கள், தென் மாநிலங்களிலேயே மிக குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து, வரியை சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறையும், தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு பிறகு, தற்போது, சாலை வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை 5% உயர போகிறதாம்.. மோட்டார் சைக்கிள்களுக்கான இப்போதைய சாலை வரி கட்டணம் கடந்த 2008 ஜூன் மாதத்திலும், கார்களுக்கான சாலை வரி கட்டணம் கடந்த 2010 ஜூன் மாதத்திலும் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 15 ஆண்டுகளில் மொத்த வாகன செலவில் 8 சதவீதம் இருசக்கர வாகனங்களுக்கு சாலை வரியாக விதிக்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பு மூலம் ரூ.1 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல, ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10% சாலை வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15% வரியும் தற்சமயம் விதிக்கப்பட்டு வரும்நிலையில், புதிய அறிவிப்பின்படி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல, ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைய போக்குவரத்துத் துறையின் ஆண்டு வருவாய் ரூ.6,674.29 கோடியாக உள்ள நிலையில், இந்த வரி உயர்வின் மூலம், இன்னும் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டு, இது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புதிய வரி உயர்வு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும், அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.