முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில், அவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கொண்ட இந்த வீட்டில் எப்போதும் பாதுகாவலர்கள் இருப்பதுடன், காவலுக்காக நாய்களும் உள்ளன. இங்கு கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை இரவில் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் பணம், நகைகள் ஏதும் இல்லாததால், கொள்ளையர்கள் 54 இன்ச் எல்.இ.டி. டிவியை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த காவல்துறையினர், ஆதாரங்களை திரட்டினர். மதில்சுவரில் ஏறிக் குதித்த கொள்ளையர்கள், மேல் மாடி வழியாக சென்று திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக தனிப்படை அமைத்து திருட்டுச் செயலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தென்கரை காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் பண்ணை வீட்டில் முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் நிகழ்ந்துள்ள திருட்டு சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே நிலவி வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜைக்காக அதிமுக சார்பில் வழங்கப்படும் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து பெற்று அறங்காவலரிடம் ஒப்படைப்பதிலும் கடும் போட்டி நிலவியது. பல முக்கிய பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்-இன் பண்ணை வீட்டில் நிகழ்ந்துள்ள இந்த திருட்டுச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முழுவதும் பாதுகாப்பான பகுதியாக அறியப்படும் ஓபிஎஸ்-இன் பண்ணை வீட்டில் துணிச்சலாக யாரும் திருட்டுச் செயலில் ஈடுபட முடியாது. முக்கிய ஆவணங்கள் எதையோ தேடியே இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திருட்டுச் செயலில் ஈடுபட்ட உண்மையான நபர்கள் கைது செய்யப்பட்டால் தான் முழு விவரமும் அதன் பின்னணியும் தெரியவரும்.