தேனாம்பேட்டையில் உள்ள நடிகை ஷோபனா வீட்டில் திருடிய பணிப்பெண் சிக்கினார்.
சினிமா நடிகை ஷோபனா வீடு தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் அமைந்துள்ளது. இரண்டாம் தளத்தில் ஷோபனா வசித்து வருகிறார். முதல் தளத்தில் நடிகை ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வசித்து வருகிறார். தரை தளத்தில் ஷோபனா பரதநாட்டிய பயிற்சி வகுப்பு செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த விஜயா என்பவர், கடந்த ஒரு வருடமாக ஷோபனாவின் வீட்டில் தங்கி அவரது தாயார் ஆனந்தத்தை கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக முதல் தளத்தில் வசிக்கும் தாயார் ஆனந்தம் வைத்திருந்த பணம் திடீர் திடீரென காணாமல் போனது. வீட்டு வேலை செய்யும் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக, நடிகை ஷோபனா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், வீட்டு வேலை செய்யும் விஜயா என்பவர் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுக சிறுக 41 ஆயிரம் ரூபாய் பணம் திருடியதாகவும், திருடிய பணத்தை வீட்டின் கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து அவரது Gpay மூலம் ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியதாக ஒத்துக் கொண்டார்.
இதையடுத்து, விஜயா தொடர்ந்து வீட்டிலேயே வேலை செய்யட்டும், திருடிய பணத்தை சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வதாகவும், அவர் மீது நடவடிக்கை வேண்டாம் எனவும் ஷோபனா, போலீசாரிடம் தெரிவித்தார்.