பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை 24 மணி நேரமும் உறுதி செய்யும் வகையில், காவல்துறை சார்பில் ‘ரோபோ போலீஸ்’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்” (ரோபோ போலீஸ்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சில குற்ற நிகழ்வுகள் நடக்கும் இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக இந்த ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த சாதனத்தில் 24 மணி நேரமும் 360 டிகிரியில் பல மீட்டர் தூரத்திற்கு துல்லியமாக கண்காணிப்பு பதிவுகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி காணொலி காட்சி பதிவு, குரல் பதிவுகள், காவல்துறையுடன் பொதுமக்கள் உரையாடும் வசதி, அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி வசதி, வீடியோ கேமரா, ஜிபிஎஸ் வசதி போன்ற வசதிகளை இந்த ரோபோ உள்ளடக்கியுள்ளது. இந்த சாதனத்தில் சிவப்பு நிறத்தில் பொத்தான் இருக்கும்.
இதை அழுத்தும்போது, உடனே காவல்துறைக்கு அழைப்பு வரும். அருகில் உள்ளவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை சப்தம் ஏற்படுத்தி உதவும். ஆபத்தில் உள்ளவருக்கு வீடியோ கால் மூலம் நேரடியாகவே காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியும். ரோந்து போலீஸ் வாகனங்கள் வீடியோ கால் மூலம் சம்பவ இடத்தை கண்காணித்து, உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வரும்.
இந்த போலீஸ் ரோபோ சாதனங்கள் சென்னை போலீஸ் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்கள் கொண்ட 4 மண்டலங்களில் தலா 50 இடங்களில் மொத்தம் 200 ரோபோக்கள் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் போலீஸ் ரோபோ நிறுவப்படும். இந்த ரோபோக்கள் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாடு முழுவதுமே டாஸ்மாக் கடைகள் மூடல்..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!! என்ன காரணம்..?