நிலவில் பிரக்யான் ரோவர் எடுத்த புகைப்படங்களை 3டி வடிவிற்கு மாற்றி இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடமும், அதன் பின்பகுதியில் மேடான இடமும் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் நாம் சமதளப் பகுதியை பார்க்கும் போது எப்படி ஒரு காட்சி உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வை நமக்குள் கடத்துகிறது இந்த ச்3டி புகைப்படம்.
இதுதொடர்பான இஸ்ரோவின் எக்ஸ் பதிவில், அனாக்லிஃப் (Anaglyph) என்பது ஒரு பொருள் அல்லது நிலப்பரப்பை எளிய முறையில் 3டி வடிவில் காட்சிப்படுத்துவதாகும். பிரக்யான் ரோவரில் உள்ள கேமராவின் இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி இந்த அனாக்லிஃப் உருவாக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த 3டி புகைப்படத்தை பார்க்க சிவப்பு மற்றும் சயான் நிற 3டி கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஸ்லீப்பிங் நிலைக்குச் செல்லும் முன்பாக பிரக்யான் ரோவர் எடுத்த இந்த புகைப்படங்கள், இஸ்ரோ-வால் தற்போது 3டி வடிவிற்கு தரம் உயர்த்தப்பட்டு பகிரப்பட்டுள்ளது.