மின்சாரத்தால் இயங்கும் பைக்கை அடுத்த ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என பல வகையான எலெக்ட்ரிக் வாகனங்களும் இந்திய சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. இந்தநிலையில், முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புதிய மாடலை உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக புதிய குழு ஒன்றை ராயல் என்பீல்டு நிறுவனம் அமைத்துள்ளதாகவும், இந்த குழு பிற நிறுவனங்களில் பணியாற்றி வரும் திறமைமிக்க நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பணியில் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு என பிரத்யேகமான பிளாட்பார்ம் ஒன்றை உருவாக்கும் பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இந்த புதிய பிளாட்பார்ம் ‘L’ என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பிளாட்பார்ம்மை பயன்படுத்தி பல்வேறு பாடி ஸ்டைல்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்க முடியும்.
சர்வதேச சந்தைகளையும் குறிவைத்து ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கவுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 1.20 லட்சம் முதல் 1.80 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டுவதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக், 2024ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், அதாவது ஜூலை-டிசம்பர் காலகட்டத்தில் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக நடப்பு ஆண்டின் இறுதிக்குள்ளாகவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பெட்ரோல் பைக்குகளை போலவே தொலைதூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ள கூடிய வகையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் இருக்கலாம். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 3 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.