உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை சென்று கொண்டிருக்கும் வேளையில், ஓர் அணியாக செயல்படுவோம் என்ற ஓபிஎஸ்ஸின் அழைப்பை எடப்பாடி தரப்பு நிராகரித்த நிலையில், ஏற்கனவே நடந்த தர்மயுத்தம் போன்று மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அடுத்த ட்விஸ்டாக உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஐயப்பன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது தென் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் கை ஓங்கிருந்தது. தற்போதும் எடப்பாடி அணிக்கு தென்மாவட்டங்களில் பக்கபலமாக உள்ளார். வேட்பாளர்கள் தேர்வில் கூட மதுரை மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சிபாரிசுகள் எடுபடவில்லை என்று பெரிதாக பேசப்பட்டது. ஆர்.பி.உதயக்குமார் எங்கு இருக்கிறாறோ அங்கு ஐயப்பனும் இருப்பார். 2016இல் உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த நீதிபதி மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், சாதுரியமாக காய் நகர்த்தி 2021 தேர்தலில் போட்டியிட வாய்ப்பையும் பெற்றார் ஐயப்பன்.
திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி வழங்கப்பட்டது. ஏற்கனவே அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த பி.வி.கதிரவன் போட்டியிட்டார். கடைசி நேர கருத்து கணிப்பில் கூட திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் வெற்றி பெறுவார் என்ற நிலையில் ஆர்.பி.உதயகுமார் தனது யுக்தியை பயன்படுத்தி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்தார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர விசுவாசி ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது , அடுத்ததாக ஆர்.பி.உதயகுமார் ஓபிஎஸ் அணிக்கு வருவார் என்பது அரசியல் கணிப்பாளர்கள் கருத்தாக பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஆர்.பி.உதயகுமாரும், ஐயப்பனும் தேனியில் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில், தேனி நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்த உதயக்குமார் ஓபிஎஸ் மகனை வெற்றி பெற செய்ததில் முக்கிய பங்குண்டு. தற்போது வெள்ளோட்டமாக ஐயப்பனை தொடர்ந்து அவரும் அடுத்ததாக ஓபிஎஸ்ஸை சந்திக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.