மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு வருமான வரியிலிருந்து பிரிவு 80EEB கீழ் ரூ1.5 லட்சம் வரையிலான பணத்திற்கு வரி விலக்கை அறிவித்திருந்தது. இதற்காக வருமான வரி விலக்கில் ஒரு பிரிவையே உருவாக்கியது. இந்த பிரிவின் கீழ் வரிவிலக்கைப் பயன்படுத்தக் கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதியாகும். இந்த சலுகை மூலம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி இந்த வருமான வரி விலக்கு கிடைக்கும். ஆனால், இந்த விலக்கைப் பெற இந்த வாகனத்தைத் தனி நபரின் பெயரில்தான் வாங்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் பெயரிலோ அல்லது இந்து கூட்டுக் குடும்பத்தின் பெயரிலோ வாங்க முடியாது. இந்த ரூ.1.5 லட்சத்திற்கான வருமான வரி விலக்கு என்பது கடன் மூலம் வாகனத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான வட்டிக்கான வரியை மட்டுமே குறைத்துக்கொள்ள முடியும்.
எனவே மின்சார காரோ, இருசக்கர வாகனமோ வாங்கும் எண்ணம் இருந்தால் வரும் 31ஆம் தேதிக்குள் வாங்கிவிடுங்கள். இதனால், கணிசமான அளவு பணத்தைச் சேமிக்க முடியும். மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இது போன்ற பல்வேறு சலுகைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் வழங்கி வருகின்றன. அதே போல் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தியாளர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.