அமலாக்கத்துறை நடவடிக்கை எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் இருந்து இரண்டு நீதிபதிகள் அதிரடியாக விலகியுள்ளனர். இந்த விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர். கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நீதிபதிகள் இருவரும் விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகியுள்ளதால், வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இந்த வழக்கில் இருந்து தான் நீதிபதிகள் விலகியுள்ளனர்.