தமிழக டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உலுக்கக் கூடிய ஊழலாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பிரச்சனைகளை கேரளா, கர்நாடகா அரசுகளிடம் பேசி தீர்வு காணாமல் திமுக நாடகம் நடத்தி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றால் தமிழ்நாடு மட்டுமின்றி, எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறைக்கப்படாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவையில் 7.17 சதவீதம் பிரதிநிதித்துவம் உள்ளது. எனவே, தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இந்த சதவீதம் மாறாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உலுக்கக் கூடிய ஊழலாக இருக்கும். டாஸ்மாக்கில் நடந்த ரூ.1,000 கோடி ஊழல் வழக்கை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, திமுகவில் யாரும் பகல் கனவு காண வேண்டாம். இந்த வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார். இதனால், கெஜ்ரிவால், கே.சி.ஆர். மகள் கவிதா போன்று செந்தில் பாலாஜியும் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.