தமிழ்நாடு முழுவதும் தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்கான உரிமைத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் ஆரம்பத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பயனாளர்களைக் கொண்டிருந்தது. சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் அரசு அறிவித்த பொருளாதார தகுதிப் பட்டியலுக்குள் வராததால் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. அவர்களில் முதற்கட்டமாக 7.35 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டனர்.
நவம்பர் மாதத்திலிருந்து அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கத் தொடங்கியது. விடுபட்ட மாதங்களுக்கும் சேர்த்து உரிமைத் தொகை வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் இன்னும் சிலரது விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. தற்போது உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 ஆக உள்ளது. தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இம்மாத தவணையின் போது புதிய பயனாளர்கள் இணைக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தகுதியான மகளிருக்கு நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.