பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. முன்னதாக ரூ.1 அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின்னர், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 56.5 லட்சம் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தையும் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகையின் 2-வது தவணை நாளை முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1.6 கோடி பேருக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியாது. இதனால், ஒருநாள் முன்னதாகவே, அதாவது இன்றே ரூ.1,000 செலுத்தப்படுமா? என பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் தவணைத் தொகையை செப்.15-க்கு பதில் ஒருநாள் முன்னதாக செப்.14ஆம் தேதியே அரசு செலுத்தியது. அதேபோல், இம்மாதமும் நடக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.