கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1.63 கோடி விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. முன்னதாக ரூ.1 அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின்னர், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
இருப்பினும் பல பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தனர். சில இடங்களில் இது தொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால்தான் உரிமைத்தொகை தாமதமாக வழங்கப்பட்டது. இருப்பினும் மேல்முறையீடு செய்பவர்களில் தகுதியானவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மகளிர், வங்கி புத்தகம், ஆதார், குடும்ப அட்டை எண், மொபைல் எண் கொடுத்து இன்று முதல் புதிய விண்ணப்பங்களை தரலாம். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து ரூ.1,000 தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.