தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செப்.15, 2023ஆம் ஆண்டு முதல் தகுதிவாய்ந்த குடும்ப பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.1,000 உதவித் தொகை கோரி 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
இந்த உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு, விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற விபரம் கடந்த மாதம் (செப்.18) முதல் அவரவர் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. அதே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, உரிமைத்தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திட்டம் குறித்து செயலாக்க அதிகாரிகள் கூறுகையில், “கலைஞர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி கிடைத்த 30 நாள்களுக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காதவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை” என்றனர்.
இந்நிலையில், செப்.18ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்து குறுஞ்செய்திகள் வந்தன. அன்று ஞாயிறு என்பதால், செப்.19ஆம் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்பவர்களில் பெரும்பாலானோருக்கான வாய்ப்பு இன்றுடன் முடிகிறது. மேலும், புதிய ரேஷன் அட்டை வாங்கியவர்கள் ரூ.1,000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.