கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்.5ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மாணவிகளின் இறுதி விவரங்களை கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.