மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், திமுக அரசு அமைந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வரை அதுகுறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த வாக்குறுதி குறித்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்குவதற்காக குடும்பத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதேபோல் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது. இதுவும் மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கியத் தகவலை பகிர்ந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக புதியப் பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், ”யார் யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகிறோம் என்றார்.

ஒரு மாணவி 12ஆம் வகுப்பு படித்து வருகிறது. அதே மாணவி கல்லூரியில் சேர்ந்தால், புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல் எங்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறினீர்களே ரூ.1000, அது எங்கே என்று கேட்கிறீர்கள். அதுவும் உறுதி. சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம். விரைவில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும். சொன்னபடி அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.