வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சி செய்யும்போது பரிவர்த்தனை தோல்வியடைந்தால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எளிதாக எங்கிருந்தும் உடனடியாக பணம் எடுக்கும் வகையில் ஏடிஎம்கள் பெரிதும் உதவுகின்றன. அதாவது வங்கி கணக்கில் பணம் இருக்கும் போது ஏடிஎம்மில் வழக்கம்போல் பணம் வந்துவிடும். இந்தநிலையில், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் ஏடிஎம்மில் பணம் வரவில்லை எனில் அதற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) திருத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகள் குறித்த தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சி செய்யும்போது பரிவர்த்தனை தோல்வியடைந்து வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் அதற்கு 2023 மே ஒன்றாம் தேதி முதல் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதற்கு ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகளின் படி, atm பரிவர்தனைகளில் தோல்வி குறித்து குறைகள் ஏதும் இருந்தால் வாடிக்கையாளர்கள் குறை தெரிவித்து ஏழு நாட்களில் அவை தீர்க்கப்பட வேண்டும்.
மேலும் தாமதமான தீர்வுக்கு ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும் மற்றும் ஆண்டு பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி அமல்படுத்தும் பணிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஈடுபட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஸ்வைப்பிங் மெஷின்களில் பணம் செலுத்த முயற்சி செய்தாலும் ஆன்லைன் ஷாப்பிங் பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்த முயன்றாலும் அதற்கு அபராதம் விதிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டுள்ளது.