தவெக-வில் பதவி கொடுக்க யாராவது பணம் வாங்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதேபோல், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதில், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து விஜய் அறிவித்தார். இது அப்போது, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இதற்கிடையே, தவெக-வில் நிர்வாகிகள் நியமனமும் ஒருபக்கம் நடந்து வருகிறது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்களை திறந்து வைத்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பனையூர் கட்சி அலுவலகத்தில் மீட்டிங் நடந்தது. சட்டமன்றத் தேர்தல் 2026இல் நடக்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தவெக தொடங்கி ஓராண்டை தொடவுள்ள நிலையில், புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான், இந்த விழுப்புரம் மாவட்ட தவெக வாட்ஸ் அப் குழுவில், கட்சிப் பதவிகளுக்கு பணம் தர வேண்டுமென்றும், நகரச் செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் தர வேண்டுமென்றும் ஒரு தகவல் பரவி வந்தது. அந்த வாட்ஸ் அப் குழுவில் பொதுச்செயலாளர் ஆனந்தின் நம்பரும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “நான் தெளிவாக சொல்கிறேன்.. யாராக இருந்தாலும், கட்சியில் பதவிக்காக பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.