குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு இளைஞருக்கும் மாதந்தோறும் ரூ.3,000 வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்..
பாஜக ஆளும் குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சியை தவிர ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்குகிறது.. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.. இதற்காக பல்வேறு அறிவிப்புகளை அக்கட்சி வெளியிட்டு வருகிறது.. அந்த வகையில் குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.. இந்நிலையில், மேலும் பல புதிய அறிவிப்புகளை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்..
குஜராத் மாநிலம் சௌராஷ்டிராவின் வெராவல் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர “ குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு வேலையில்லாத இளைஞருக்கும் வேலை கிடைப்பதை தனது கட்சி உறுதி செய்யும்.. ஒவ்வொரு வேலையற்ற இளைஞருக்கும் வேலையின்மை உதவித்தொகையாக மாதம் ரூ 3,000 கிடைக்கும்.. 10 லட்சம் அரசு வேலை காலியிடங்களை உருவாக்கப்படும்..
“ஐந்தாண்டுகளில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு என்னை வெளியே தள்ளுங்கள். வேலையில்லாத ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்போம். எனது எண்ணமும் தெளிவாக உள்ளது, நான் படித்தவன், அவர்களுக்கு வேலை கொடுப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். டெல்லியில் அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்..
எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்… ஆனால் இலவச கலாச்சாரம் குறித்து இன்று என்னை எல்லோரும் என்னை டிவியில் விமர்சிப்பார்கள்… இன்று குஜராத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி கடன் உள்ளது. நான் இதற்குப் பின்னால் இருந்தேனா? கெஜ்ரிவால் இதைச் செய்தாரா? இந்த கடனுக்கு ஊழல் தான் காரணம்..” என்று தெரிவித்தார்..
முன்னதாக கடந்த 21-ம் தேதி சூரத் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் குஜராத் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு 24×7 மின்சாரம் தவிர அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். டிசம்பர் 31, 2021 வரை நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாகவும் அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..