நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3.99 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து சம்மனை வழங்கினார்.
மேலும், சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்ததாக தகவல். மேலும் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம்” கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிகப்பட்டுள்ளதாகவும், விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.