முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு அல்லது கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 17.08.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான தகுதிகள் குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு 18-லிருந்து 50 வரை அவசியம். சுய தொழில் செய்யும் நபர்கள், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன்(பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும். இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை அல்லது கமிஷன் மட்டுமே வழங்கப்படும். சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.