மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6,000 ரூபாய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதேநேரம் மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் பாதிப்பு விவரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன் இணைத்து ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, சுமார் 5.5 லட்சம் பேர் ரூ.6,000 நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில, இதுவரை 6,000 நிவாரணம் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வாழும் மக்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமாக சென்னை முகவரிக்கு ரேஷன் கார்டை மாற்றவில்லை.
முகவரியை மாற்றாமல் சென்னையிலேயே பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதுதான் 6,000 நிவாரணம் கிடைக்காமல் போவதற்கு முக்கிய காரணம். அவர்கள் மட்டும் சென்னை முகவரிக்கு ரேஷன் கார்டுகளை மாற்றியிருந்தால், எந்த சிக்கலும் இருந்திருக்காது. ஆனால், உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இவர்கள் தான் அதிகம். இவர்கள் தான் பிழைப்புத் தேடி வந்து பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், எண்ணூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், பெருங்குடி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
அவர்களில் பலர் ரேஷன் கார்டை சென்னை முகவரிக்கு மாற்றாததால், 6,000 வெள்ள நிவாரணத்தை வாங்க முடியவில்லை. அதேநேரம் வெள்ள நிவாரண விண்ணப்பங்களை பரிசீலித்து எப்போது அந்த பணத்தை வங்கிக் கணக்கில் அரசு வழங்க போகிறது என்பதும் இதுவரை தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க, பொங்கல் பரிசுத்தொகை 1,000 ரூபாய் அறிவிக்கப்பட்டது. அந்த பரிசும் இவர்களில் பலரும் வாங்க முடியாமல் போய்விட்டது. 1,000 பணம் வாங்க சொந்த ஊர் தான் போக வேண்டும். கைரேகை வைத்தால் மட்டுமே தருவார்கள் என்பதால் அந்த பணம் கிடைக்காமல் போய்விட்டது. 1,000 பணம் வாங்க 2000-க்கும் மேல் செலவு செய்தால் மட்டுமே போக முடியும் என்ற நிலை இருந்தது.
ஏற்கனவே வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த இவர்களில் பலரால், சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியவில்லை. ரேஷன் கார்டை சென்னை முகவரிக்கு மாற்றி இருந்தால் அவர்களுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு மட்டுமின்றி, 6000 வெள்ள நிவாரணமும் கிடைத்திருக்கும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் சென்னையில் பொருட்களை வாங்கியவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.