கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மோசடி செய்தவர்களை விசாரணைக்குழு கண்டறிந்த பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டுறவுத்துறையில், தவறு நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.