தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்து அமைப்பினர் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆஸ்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் மாற்று தேதி அறிவித்து ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.எஃப்.ஐ. தடை செய்யப்பட்ட போதும் கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் கடைசி நேரத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் தெரிவித்தனர். அதேநேரத்தில், மத்திய-மாநில உளவு அமைப்புகளின் எச்சரிக்கையை அடுத்து அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் இந்த வழக்கை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.