“ஆா்எஸ்எஸ் அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவா்கள் இல்லை” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானா்ஜி கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ”பாஜகவின் அரசியலை விரும்பாதவர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கின்றனர். அந்த அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் இல்லை” என்று பேசியிருந்தார். மம்தாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிர்ரஞ்சன் சௌத்ரி கூறுகையில், ”ஆா்எஸ்எஸ் அமைப்பை மம்தா பானர்ஜி பாராட்டுவது இது முதல் முறையல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மம்தா பானர்ஜி அங்கம் வகித்துள்ளார். வாக்குகளைப் பெற சில நேரம் இந்து அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும் சில நேரம் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் மம்தா பானர்ஜி பேசுவார்” என்று தெரிவித்தார்.
பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ”ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுக்கு மம்தா பானர்ஜியின் சான்றிதழ் தேவையில்லை. யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எங்களுக்கு சான்றிதழ் தேவையில்லை. அதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அவருக்குப் பதில் சொல்ல முடியாது” என்றார். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸை மம்தா பானர்ஜி பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.