வதந்தி வீடியோ விவகாரத்தில், டெல்லியை சேர்ந்த பாஜக பிரமுகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.
டெல்லியை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த என்பவர், கடந்த 3-ம் தேதி, பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கப்படுவதாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார்..
அந்த வீடியோவை தான் தயாரிக்கவில்லை என்றும், தனக்கு வந்த செய்தியை ஃபார்வேர்டு செய்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. இதில் தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், அரசியல் கட்சியில் உள்ளதால், பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.. எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்..
இந்த மனு இன்று நீதிபதி இளம்பிறையன் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, அரசு தரப்பில், “ மனுதாரர் திட்டமிட்டு, தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.. இதனால் தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.. எனவே இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.. இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது..” என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வீடியோவால் தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது போது சித்தரிக்கப்பட்டுள்ளது.. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் நிலவியது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.. மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், இந்த வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்..