நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை, தனது முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளது. இதனால் 1,500 முதல் 2,000 கன அடி வரையிலான உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையால், நெல்லை மாவட்டமே தண்ணீரில் தத்தளித்தது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் எற்பட்ட வெள்ளம், அருகில் இருந்த வீடுகளை மூழ்கடித்தது. இதனால் மக்கள் தங்களது உடைமைகளை இழந்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தற்போதுதான் அந்த மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில், மணிமுத்தாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அணை தனது முழு கொள்ளவான 118 அடியை எட்டியுள்ளது. இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ’திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக 1,500 முதல் 2,000 கன அடி வரையிலான உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும். வெள்ள அபாயம் எதுவும் தற்போது இல்லை. இருப்பினும், பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும்” என பதிவிட்டுள்ளார்.