நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தற்போது நிலவை நோக்கி சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இது ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்தது கிடையாது.
இந்நிலையில், ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்வதற்காக லூனா -25 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது. அதன்படி, இன்று அதிகாலை 2.10 மணியளவில் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 47 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவில் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை ஏவியுள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை ஐந்தே நாட்களில் சென்றடைந்துவிடும். பின்னர் 4, 5 நாட்கள் நிலவின் பாதையில் சுற்றும் இந்த விண்கலம், தரையிறங்குவதற்கான சரியான இடத்தை ஆய்வு செய்து தரையிரங்க உள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி அலெக்ஸாண்டர் பிளோகின் கூறுகையில், “வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறங்க இருக்கிறது. தற்போது வரை நிலவின் பூமத்திய ரேகை மண்டல (Equatorial Zone) பகுதியில் தான் விண்கலம் தரையிறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். நிலவில் ஒரு ஆண்டு காலம் ஆய்வு செய்யும் வகையிலும், நிலவின் தென் துருவத்தில் உள்ள மண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் வகையிலும் லூனா – 25 வடிவமைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சந்திரயான் – 3 விண்கலம், ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம் அதற்கு முன்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. லூனா – 25 விண்கலம் 1,800 கிலோ எடை கொண்டது ஆகும். நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், எரிபொருள், ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை இது ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.