Russia-Ukraine war: உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியவில்லை. இந்தநிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சனிக்கிழமை (ஏப்ரல் 19,) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக, ரஷ்யா-உக்ரைன் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
கிரெம்ளினில் நடந்த ஒரு சந்திப்பின் போது, ரஷ்ய ஆயுதப்படைகளின் தளபதி வலேரி ஜெராசிமோவின் அறிக்கையை புடின் கேட்டறிந்தார். தற்போதைய நிலைமை குறித்து அவர் அறிக்கை அளித்தார். இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், நேற்று (ஏப். 19) மாலை 6 மணி முதல் (ரஷிய நேரப்படி) நாளை (ஏப். 21) நள்ளிரவு வரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும் என குறிப்பிட்டுள்ளார். ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்தக் காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்க்கிறோம் என ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது
மாஸ்கோவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மனிதாபிமானக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இன்று 18:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் வரை, ரஷ்யப் படைகள் ஈஸ்டர் போர் நிறுத்தத்தை அறிவிக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி நான் உத்தரவிடுகிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ‘எங்கள் துருப்புக்கள் முன்னேறி வருகின்றன’ என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘எனக்கு இப்போதுதான் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியிடமிருந்து ஒரு அறிக்கை கிடைத்தது.’ இன்று நமது துருப்புக்கள் குர்ஸ்க் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தன மற்றும் தங்கள் நிலைகளைத் தக்க வைத்துக் கொண்டன. பெல்கோரோட் பகுதியில் எங்கள் துருப்புக்கள் முன்னேறியுள்ளன, மேலும் எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதி விரிவடைந்துள்ளது.
மனித உயிர்களுடன் விளையாட புதினின் மற்றொரு முயற்சி இந்த நேரத்தில் தெளிவாகத் தெரிகிறது. உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் பரவி வருகின்றன. 5:15 மணிக்கு ரஷ்ய தாக்குதல் ட்ரோன்கள் எங்கள் வானத்தில் காணப்பட்டன. உக்ரைனின் வான் பாதுகாப்பு மற்றும் விமானங்கள் ஏற்கனவே எங்களைப் பாதுகாக்கப் பணியாற்றத் தொடங்கியுள்ளன. நமது வானில் காணப்பட்ட ட்ரோன்கள், ஈஸ்டர் மற்றும் மனித வாழ்க்கை குறித்த புடினின் உண்மையான அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன.