கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். யெகோவா சாட்சிகள் என்ற பிரிவு கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டு வெடித்தது. இதையடுத்து, அந்த பிரிவினருக்கு எதிராக செயல்படக்கூடியவர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, திருச்சூர் மாவட்டம் கொடக்கரா காவல் நிலையத்தில் கொச்சினைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் சரணடைந்தார்.
மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான் தான் என்றும், யெகோவா சாட்சிகள் என்ற பிரிவு கிறிஸ்தவர்களின் செயல்பாடு பிடிக்காததால் குண்டு வைத்ததாக அவர் தெரிவித்தார். அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மலையத்தூரைச் சேர்ந்த பிரவீன் பிரதீப் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதனால் குண்டுவெடிப்பு உயிரிழப்பு 6-ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்த 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.