Israel-Hamas war: கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்றளவும் போர் குறைந்தபாடில்லை!.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய தீவிரவாத குழுவான ஹமாஸ் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் ஒரே நாளில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் ஹமாஸ் போராளிகளால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அக்டோபர் 7, 2023 அன்று காலை 6:30 மணியளவில் பாலஸ்தீனிய தீவிரவாதக் குழுவான ஹமாஸ், தெற்கு இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை வீசியது. அப்போது நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். கண்மூடித்தனமாக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். நாடு முழுவதும் சுக்கோட் என்ற மதப் பண்டிகையைக் கொண்டாடிய நாள் அது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அல்-அக்ஸா வெள்ளம் என பெயரிட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் அக்டோபர் 8ம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் Operation Swords of Iron ஐ ஆரம்பித்து காசாவை முழுவதுமாக முற்றுகையிடத் தொடங்கியது மற்றும் காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசிக்கும் சுமார் 1.5 மில்லியன் மக்களை தங்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டது.
காஸா மக்கள் தண்ணீர், உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகள் இன்றி கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், ஓராண்டுக்குப் பிறகும் தற்போதும் அதே நிலை நீடிக்கிறது. அதாவது காஸாவில் உள்ள 70 சதவீத கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. இந்த தாக்குதலில் இதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 16,765 பேர் குழந்தைகள். சுமார் 98 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மறுபுறம், போரில் இதுவரை 1,139 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 8,730 பேர் காயமடைந்துள்ளனர். இது தவிர 125 ஊடகவியலாளர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
அறிக்கையின்படி, இஸ்ரேலிய தாக்குதலால் இதுவரை காசா பகுதியில் 80 சதவீத வர்த்தக வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. 87 சதவீத பள்ளி கட்டிடங்கள் இடிந்து விட்டன. காசா பகுதியில் 144,000 முதல் 175,000 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 36 மருத்துவமனைகளில் 17 மருத்துவமனைகள் மட்டுமே செயல்படுகின்றன. 68 சதவீத சாலைகள் அழிந்து, 68 சதவீத விவசாய நிலங்கள் தரிசாக மாறியுள்ளன.
இந்த போரால் காஸாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 81 சதவீதம் குறைந்துள்ளது. 2.01 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் வீடில்லாமல் உள்ளனர். 85 ஆயிரம் பாலஸ்தீன தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் இதுவரை 42 மில்லியன் டன்களுக்கும் அதிகமான குப்பைகள் காசா பகுதியில் விழுந்துள்ளன. அதை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம் மற்றும் $700 மில்லியன் வரை செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: அடிக்கடி ஹேர் கலரிங் செய்கிறீர்களா?. இந்த ஆபத்து அதிகம்!. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!