விழுப்புரம் அருகே திருமணம் செய்ய பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி. இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டுமென பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டு கல்லூரி படிப்பினை தொடர வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, மாணவி வினோதினி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோருடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், அவரது பெற்றோர் திருமணம் முடிக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடி பார்த்தும் மகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் வீட்டின் அருகே இருந்த கிணற்று நீரை இறைத்து தேடி பார்த்துள்ளனர். அப்போது, வினோதினி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த அரகண்டநல்லூர் காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.