சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, புயல் சின்னமாகவும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் கனமழை கொட்டிய நிலையிலும் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படவில்லை. இதனால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முன்னதாகவே அறிவிப்பு வெளியிட வேண்டும். எந்த குளறுபடியும் இருக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.